சிவபெருமானாய் வி.கே. ராமசாமி, கோவில் பூசாரியாய் நாகேஷ், கோவில் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் கலைஞன் விஜயகுமார் என மற்றும் பலர் நடித்த இத்திரைப்படம், அந்த காலத்தில் பல சர்ச்சைகளை எழுப்பியிருக்கக் கூடும். அவ்வளவு நவீனத்துவம். அவ்வளவு நகைச்சுவை. அவ்வளவு தொலைநோக்குப் பார்வை. சில அரசியல் நையாண்டியும்! படத்தின் முதல் முப்பத்து மூன்று நிமிடங்கள், சாதாரண ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபத்தி எட்டு கதை. அதன் பிறகு, தன் குறை சொல்லி முறையிடும் பூசாரியின் கூக்குரலுக்கு ஓடி வரும் சிவபெருமான். அதன் பிறகு தான், படம் களை கட்டுகிறது! முழுவதும் சொன்னால் சுவாரஸ்யம் தீர்ந்துவிடும். எனவே, உங்களை போரடிக்காமல் படத்தைப் பார்க்கச் சொல்லி தூண்ட, சில டயலாக்ஸ்:
“யாரது, பரமசிவனா என் முன்னால நின்னு பேசுறது?”
“பின்ன என்ன பாபநாசம் சிவனா பேசுறது? பரமசிவம் தான் யா பேசுறேன்!”
“ஆஹா... நா பாக்குற இந்தக் காட்சி, உண்மையா இல்ல பிரம்மையா?”
“பிரம்மையும் இல்ல எருமையும் இல்ல! பரமசிவனே தான்!”
தன் ஏழ்மை நிலையைக் குறிப்பிடும் பூசாரியிடம்:
“எனக்கும் பொருளாதாரத்துக்கும் என்னய்யா சம்பந்தம்? உன் பொண்ணு கல்யாணத்துக்கு பணம் வேணும்னா அத எவனாச்சும் அறிஞ்சவன், தெரிஞ்சவன், இல்ல சிநேகிதன போய் கேளு. அத விட்டுகிட்டு என் கிட்ட வந்து அழுதா? நா என்ன கோவிலுக்கு பின்னால Bank-ஆ வச்சு நடத்துறேன்?”
கோவில் என்பது எதற்கு என்று கேட்கும் பூசாரியிடம் சொல்லும் பதில்: “இத பாரு பூசாரி, கோவில்-ங்கறது சொத்து கேட்டு சொகம் கேட்டு அழுவுறதுக்கு உண்டான எடம் இல்லையா. இந்தக் கெட்டுப் போன ஒலகத்துல, ஊருக்கு ஊரு ஒரு கோயிலக் கட்டி, அங்கங்க நாப்பதுக்கு நாப்பது சதுர அடிய கெடாம வச்சிருந்து, இந்த கெட்டுப் போன குப்பனெல்லாம் அங்க வந்து நின்னு, நாம ஏன் கெட்டோம், அடுத்தவன ஏன் கெடுத்தோம், இனிமே கெடாம இருக்குறதுக்கு என்ன வழி-னு சிந்திக்கிறதுக்கு தான்யா விட்டு வச்சாங்க.”
“அப்போ நாங்க சிந்திக்கலயா?”
“எங்கைய்யா சிந்திக்கிறீங்க? நீங்க கெடுறதுக்கும் அடுத்தவன கெடுக்குறதுக்கும் இங்க வந்து தான Plan-ஏ போடுறீங்க!”
இரண்டு மணி நேரம், பதினான்கு நிமிடம் ஓடும் இத்திரைப்படத்தின் ஒரு சின்ன சாம்பிள் தான் இது! படத்தில் பாட்டு, பைட்டு கூட உண்டு! :) படம் பார்த்தால் நிச்சயம் சிரிப்பீர்கள். தவற விடாமல் பார்க்கவும்!