க. சுதாகரின் “6174” நாவல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன் எனக்கு இருந்த புத்தகம் மீதான மோகத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. நான்கு வருடத்திற்கு முன், Dan Brown-ன் “The Lost Symbol” புத்தகத்தை இரண்டு நாளில் படித்து முடித்தேன். அவ்வளவு பரபரப்பு அந்த கதை! பிளஸ், Dan Brown-ன் நாவல்கள் மீது அந்த சமயம் அவ்வளவு ஈர்ப்பு எனக்கு. இந்த புத்தகத்தினைப் பற்றி நான் கூறுவதற்கு முன், என்னைப்பற்றி நீங்கள் கொஞ்சம் (சத்தியமா கொஞ்சம் தான்) தெரிந்துகொள்ள வேண்டும். நான் ஒரு Mathematics Graduate. புத்தகம் மீதான ஆர்வம் எனக்கு வர, என் உயிர் நண்பன் எனக்கு பரிந்துரைத்த முதல் நாவல் – Dan Brown-ன் Digital Fortress. கணிதம், எண் கணிதம், இரகசியஎழுத்துக்கலை (Cryptography) என அந்த நாவலின் மூலம் Dan Brown என் மனதில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துவிட்டார். விளைவு, 2007-ல் புத்தகம் படிக்கத்தொடங்கிய நான், அவர் எழுதிய அனைத்து நாவல்களையும் (இன்று வரை) படித்து முடித்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் முன் புத்தகம் மீதான் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பிக்க, அதே Dan Brown-ன் Inferno நான் படித்து முடிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது! இப்படியிருக்க, ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் என் உயிர் நண்பனின் தலையீடு... இம்முறை 6174 புத்தகம் படி என்று கூறினான். 6174. கதையின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்க, கடைசியாய் நான் படித்த தமிழ் நாவல் பற்றி யோசித்துப் பார்க்கையில், அது கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் – சுஜாதாவின் “பிரிவோம் சந்திப்போம்”. இக்கதையை (6174) படித்து முடித்த பின், இதற்கு இதை விட ஒரு அருமையான தலைப்பு வைத்திருக்க முடியாது என்றே தோன்றியது! 6174 புத்தகம் பற்றிய இந்த விமர்சனம் என்னுடைய சொந்த கருத்து மட்டுமே.
இனி புத்தகம் பற்றி...
இது ஒரு த்ரில்லர் கதை. தமிழில் நான் படித்த வரை (நான் படித்தவை மிக மிக குறைவு!), இது போல் வேகமாக செல்லும் மிஸ்ட்ரி-த்ரில்லர் நாவல்கள் குறைவு! நாவலைப்பற்றி Develop the hints ஸ்டைலில் சொல்ல வேண்டுமெனில்:
லெமூரியா-போர்க்கப்பல்கள்-விஞ்ஞானிகள்-தீவிரவாதிகள்-விண்கற்கள்-பழந்தமிழ் பாடல்கள்-புதிர்கள்-எண்கள்-திருவனந்தபுரம்-லோனார்-பீகார்-மியன்மார்-பிரமிட்.
புத்தகம் படிக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் எனக்கு சுதாகர் அவர்கள் இந்திரா சௌந்தர்ராஜன் போல முயற்சி செய்கிறார் போலும் என்று எண்ணினேன். என் எண்ணத்தை பல வகைகளில் தவிடு பொடியாக்கிவிட்டார். புத்தகம் ஆறு சாப்டர்களாக பிரிக்கபட்டிருக்கிறது. 1. ஆதி கதை, 2. ஒருங்குதல், 3. பயணம் 4. அடைவு, 5. இயக்கம், 6. பிறகு...
ஆறு சாப்டர்கள் என்று சொல்வதை விட ஆதி கதை மற்றும் ஒருங்குதல் (63 பக்கங்கள்) ஒரு சாப்டர் என்றும் மீதி அனைத்தும் (340 பக்கம்) ஒரு சாப்டர் என்றும் பிரித்துக்கொள்ளலாம்! முதல் சாப்டர் அறிமுகம் என்றால் இரண்டாம் சாப்டர் தான் பயணம். முதல் 63 பக்கங்கள் படிக்க எனக்கு ஒரு வாரம் ஆனது. அடுத்த 340 பக்கம் மூன்று நாளில் (Weekdays) படித்து முடித்துவிட்டேன்! அவ்வளவு வேகம்!
இப்புத்தகம் என்னை இப்படி கட்டிப்போட கதை ஒரு முக்கிய காரணம் என்றாலும், கதையின் பலமாக கணிதம், புதிர்கள் என என்னை ஈர்க்கும் சமாச்சாரங்கள். மேலும், பல இடங்களில் ஆசிரியரோடு என் personal கருத்துக்களும் ஒத்துப்போனது தான் முக்கிய காரணம். உதாரணமாக
“என்னதான் நாம கற்பனை பண்ணினாலும் நமக்கு அறிந்ததைக் கொண்டு மட்டுமே அறியாததை அறிய முடியும்.”
நானும் சில சமயங்களில் இது போல யோசித்திருக்கிறேன்! இது போல பரிமாணங்கள், சிந்தனைகள், 6174, கோலங்கள், பிரமிடுகள் என கதையின் போக்கில் வரும் சில (நமக்கு) தெரியாத சில விஷயங்களைப் பற்றி விவரிக்கும் இடங்களில் தெளிவு!
கதைக்கு வழக்கம் போல் ஒரு நாயகன், ஒரு நாயகி என்று இல்லாமல், கதையில் வரும் அனைவருமே முக்கிய பங்கு வகிக்கும் வகையிலும் என்னைக் கவர்ந்துவிட்டார், ஆசிரியர் சுதாகர் அவர்கள். தூத்துக்குடிக்காரர்! அவர் தமிழை ‘நான்’ ரசிக்காமல் இருக்க முடியுமா!
புத்தகத்தில் நான் கண்ட ஒரே நெகடிவ் பாயின்ட் – ஒரு சீனுக்கும் மற்றொரு சீனுக்கும் இடையில் போதிய இடைவெளி இல்லாமை. சென்னையில் ஒரு சீன், சிகாகோவில் ஒரு சீன், நியோர்கில் ஒரு சீன் என, இவைகளுக்கு இடைவெளி ஒரு பாரா மட்டுமே! வழக்கமாக தொடரும் ஒரு பாரா போல! அந்த பாராவில் ஒரு வரி படித்த பின் தான் இது வேற சீன் என்றே புரிகிறது. ஒருவேளை இது சில பல வருடங்கள் கழித்து நான் புத்தகம் படிப்பதால் ஏற்பட்ட பாதிப்பாக கூட இருக்கலாம். படித்தவர்கள் சொல்லுங்கள்!
ஒரு புத்தகத்தைப் பற்றி நான் எழுதும் முதல் போஸ்ட் இது. My First Book Review. Comments and Critics welcome.
புத்தகம் வேண்டுமானால் சொல்லுங்கள்...