பல ரசிகர்களால் 'வாத்தியார்' என்று அன்புடன் அழைக்கபடும் சுஜாதாவின் புத்தகம் பற்றி விமர்சிக்ககூடிய தகுதி எனக்கு உண்டா என்றால், இல்லை! இது பற்றி நண்பர் ஒருவருடன் பேசுகையில், 'விமர்சனம்' என்று எழுதாமல் 'புத்தகம் படித்த அனுபவம்' என்று எழுதுங்கள் என்றார்! எழுதாமலும் இருக்க முடியவில்லை! பின் வரும் இந்த அனுபவம், என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே. பிடித்திருந்தால் 'லைக்குங்கள்' :) மேலும் பல அனுபவங்களை பகிர்கிறேன்!
இந்த புத்தகத்தின் பின்னல் எழுதியிருந்தது போல் தமிழ்நாட்டில் பத்திரிக்கை, புத்தகம் படிக்கிறவர்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பெயர் தான் சுஜாதா. இதற்கு முன் சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மற்றும் 'பிரிவோம் சந்திப்போம்' படித்திருந்தாலும் அவரின் அறிவியல் புதினம் படிக்க கிடைத்த முதல் புத்தகம் 'என் இனிய இயந்திரா'. டைரக்டர் ஷங்கரின் 'எந்திரனை' மறந்திருக்க மாட்டீர்கள்... அதே போல், அந்த படத்திற்காக அவர் சுஜாதா அவர்களுக்கு கொடுத்த 'Credit'-ஐயும் மறந்திருக்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்!
கி.பி. இரண்டாயிரத்து இருபத்தி இரண்டில் நடக்கும் கதை. இன்னும் எட்டு வருடங்களில் வந்துவிடும் என்றாலும், இந்த கதையில் சுஜாதா அவர்கள் காட்டியிருக்கும் புதுமை மற்றும் கற்பனைக்கு அளவே இல்லை! ஆயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தி ஆறில் எழுதிய கதை போலவே இல்லை! இப்பொழுதும் இதை நான் படிக்கையில் பல இடங்களில் மெய் மறந்து போனேன். மனிதருக்கு அவ்வளவு கற்பனைத்திறன்!
சோ, 2022-ல் இந்தியாவில் நடக்கும் ஒரு கதை. அந்த கால கட்டத்தில் பிள்ளை பெறுவதற்குக் கூட அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்! மக்களின் பெயர்கள் அரசாங்கமே வைக்கும். அவையும், இரண்டு எழுத்து தான் இருக்கும். (ரவி, மணி, நிலா, ஜீனோ எக்ஸட்ரா). மக்கள் அனைவருக்கும் SSN போல, ஒரு unique எண் இருக்கும். சொந்த வீட்டை வாடகைக்கு விட அரசாங்க அனுமதி வேண்டும். வீடியோ காலிங் வசதி. பேசும் எந்திரம் (நாய், மற்றும் பல வடிவில்). மக்களின் சேவைக்கு இயந்திரங்கள் இருக்கும். மேற்கூறிய அனைத்தும் முப்பத்து ஆறு சாப்டர்கள் கொண்ட இந்த புத்தகத்தின் முதல் சாப்டரில் மட்டும் வருபவை! எப்பூடி?
நாட்டை ஆளும் பிரதமர் ‘ஜீவா’, அவரை கொலை செய்யும் நோக்குடன் இருக்கும் ஒரு புரட்சிப்படை ஒன்றின் உறுப்பினர் ‘ரவி’, அவனின் pet ‘ஜீனோ’ என்கிற ஒரு பேசும் இயந்திர நாய், ‘சிபி’ என்கிற ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர், ‘நிலா’ என்கிற அவனது (சிபியின்) மனைவி. இவர்களே இந்த என் இனிய இந்திராவை நடத்திச் செல்கிறார்கள். கதை போகும் போக்கில் சில இடங்களில் என்னை திடுக்கிட வைத்துவிட்டார் ஆசிரியர். எண்பதுகளில் இப்படி ஒரு கலாச்சாரத்தைப் பற்றி கற்பனை செய்ய முடியுமா என்று! மேலும் ஜீனோவை ஒரு புத்தகப் புழுவாக காட்டியிருப்பதும் அது அடிக்கும் சில சர்காஸ்டிக் (Sarcastic) ஜோக்கும் ரசிக்கும்படியாக இருக்கும்.
சென்னையின் மெட்ரோ ரயில் வருங்காலத்தில் எப்படி இருக்கலாம், சென்னையிலிருந்து டெல்லி செல்ல எடுக்கும் நேரம், மற்ற எந்திரங்கள் (Robots) பற்றி ஜீனோ அறிவது, மனிதர்களின் உணர்வுகள் பற்றி பேசுவது, சிறைச்சாலை எப்படி இருக்கும், விளையாட்டுக்கள் என்னவெல்லாம் இருக்கும், என்று தனக்கென ஒரு உலகமே படைத்திருக்கிறார் ஆசிரியர். இந்த அனுபவத்தை எழுதும்போது கூட பிரமிப்பு வருகிறது!
கதையை வழக்கம் போல Develop the hints ஸ்டைலில் சொல்ல வேண்டுமெனில்:
2022 - பேசும் இயந்திர நாய் – காணாமல் போன சிபி – கண்டுபிடிக்க முயலும் ரவி, நிலா – ஜீவாவை கொல்ல நடக்கும் சதி – நிலா-ரவியின் பங்கு – ஜீனோவின் மாற்றம் – நிலாவின் மனமாற்றம் – உண்மைச் சதி!
திடுக்கிடவைக்கும் பல திருப்பங்கள், நான் மிகவும் ரசித்து படித்த வெகு சில புத்தகங்களில் ஒன்றாக சேர்ந்துவிட்டது! ‘மீண்டும் ஜீனோ’ என்ற இப்புத்தகத்தின் அடுத்த பாகமும் என் வாசிப்பு பட்டியலில் சேர்த்தாகிவிட்டது!
இப்புத்தகத்தின் முகப்புரையில் சுஜாதா அவர்களின் அறிவியல் புதினம் பற்றிய விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது. இளம் எழுத்தளர்களுக்கு வழிகாட்டியாய் இது இருக்கலாம் என்பதால், இதோ:
“விஞ்ஞானக் கதை என்பது விஞ்ஞானப்படி சாத்தியமாக இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
தப்பு.
விஞ்ஞானக் கதைப்படி (சயின்ஸ் ஃபிக்ஷன்) என்பதின் தற்போதைய வடிவத்தில் அது எல்லையற்ற மிக விஸ்தாரமான கற்பனையாக இருக்கிறது. அதனால் மாற்று உலகங்களையும் மாற்று சித்தாந்தங்களையும் படைக்க முடிகிறது.
அதன் காலைகளில் இருளையும் ராத்திரிகளில் வெளிச்சங்களையும் தேவைப்பட்டால் அமைத்துக் கொள்ளலாம். அதன் கடவுள்கள் புரோட்டான் வடிவெடுக்கலாம். அதன் பெண்கள் மகப்பேற்றை ஒட்டுமொத்தமாக இழந்து மீசை வைத்துக் கொள்ளலாம்.. அதன் நாய்கள் பிளேட்டோவைப் பற்றியும் பிரும்மசூத்திரம் பற்றியும் பேசலாம்…
ஆயிரமாயிரம் மாற்று சாத்தியக் கூறுகளை ஆராயும் அற்புத சுதந்திரத்தைப் பேசுகிறது விஞ்ஞானக் கதை!
அதைப் பயன்படுத்தும்போது, அதன் புதிய விளையாட்டுக்களை ஆடும்போது ஒரேயொரு எச்சரிக்கைதான் தேவைப்படுகிறது. கதையில் இன்றைய மனிதனின் உணர்ச்சிகளுடன் ஆசாபாசங்களுடனும் ஏதாவது வகையில் ஒரு சம்பந்தம் அல்லது தொடர்பு காட்ட வேண்டும்! அப்போது தான் நமக்கு அதில் சுவாரஸ்யம் ஏற்படுகிறது!”
புத்தகம் உங்களுக்கு வேண்டுமெனில் எனக்கு எழுதுங்கள், தருகிறேன். படித்துவிட்டு நீங்களும் ஒரு அறிவியல் புதினம் படையுங்கள்!
Image Courtesy: Google